அது ஏன் இந்த ஊர் பால்கோவா மட்டும் அவ்வளவு சுவை மற்றும் பிரபலம் என்று கேட்டால், அது அங்கு கிடைக்கும் பால் என்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ஆண்டாளுக்கு மிகவும் பிரபலம். அந்த காலத்தில் மாடுகள் நிறைய இருந்தனவாம் (இந்த காலத்திலும் கூட !), அதனால் மீதமாகும் பாலை வீணாக்காமல் இதை செய்ய ஆரம்பித்தார்கள். இன்று, அது அந்த ஊரின் சிறப்பகிவிட்டது. பால்கோவா கிண்டுவதற்கு காலையில் 6 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரையும், திரும்பவும் மாலை ஆறரை மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் இதை செய்கிறார்கள். இதுதான் பால் வரும் நேரம் !! ஒரு நாளில் 600 கிலோ வரையிலும் கூட இங்கே பால்கோவா தயார் ஆகிறது !
ஒரு கேன் பால் என்பது பத்து லிட்டர், இதில் ஒன்றேகால் கிலோ ஜீனியை போட்டு மெதுவாக கலக்குகிறார்கள். இதை செய்ய கேஸ் அடுப்பு பயன்படுத்துவதில்லை, இன்றும் முந்திரி குப்பைகளை வைத்து எரிக்கிறார்கள். அதுவும் இந்த சுவைக்கு ஒரு காரணம் போலும் ! மெதுவாக அந்த பாலை கிண்ட கிண்ட அது சுண்டி வருகிறது. இங்கு பால்கோவா மட்டும் இல்லாமல் பால் அல்வா ஒன்றும் மிகவும் சுவையாக இருக்கும். பால் அல்வாவில் நெய், முந்திரி, பாதாம் என்று சேர்த்து இன்னும் கொஞ்சம் பதமாக செய்தால்....பால் அல்வா ரெடி !!
முடிவில் அந்த பதம் வர ஆரம்பிக்கும்போது பால் சிறிது மஞ்சள் நிறத்தில் ஆகிறது. பின்னர் அது கெட்டியாகி அந்த வாசனை உங்களது மூக்கை துளைக்க ஆரம்பிக்கும் பாருங்கள், அப்போதிலிருந்தே உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். பத்து லிட்டர் பால் கொண்டு செய்தால் ஒன்று அல்லது இரண்டு கிலோ வரை பால்கோவா கிடைக்கிறது ! நெருப்பிலே காய்ந்து இவர்கள் செய்யும் கைபக்குவதில்தான் இங்கே பால்கோவா அவ்வளவு சுவை போலும் !
முடிவில் அந்த பால்கோவா ரெடி ஆகும்போது கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது ஆற விடுகிறார்கள். பின்னர் ஒரு பிளாஸ்டிக் விசிறி கொண்டு நன்கு வழித்து எடுத்து ஒரு தட்டில் காய வைக்கிறார்கள். அது காயும்போதே அடுத்து பால் ஊற்றி இன்னும் பால்கோவா ரெடி ஆகிறது ! முடிவில் அந்த தட்டில் இருக்கும் பால்கோவாவை நன்கு கிளறி விட்டு பேன் கீழே காய வைக்கிறார்கள். அது நன்கு ஆறியவுடன் பாக்கிங் இடத்திற்கு செல்கிறது. இங்கு கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என்று எடை போட்டு, ஒரு கவரில் பாக் செய்கின்றனர். பின்னர் கடையில் இருந்து போன் செய்யும்போது வண்டியில் ஏற்றி அனுப்புகின்றனர்.
No comments:
Post a Comment